பெரும்பாலான மக்களின் வாழ்வோடு ஒன்றிவிட்ட விண்டோஸ் இயக்கம், சென்ற நவம்பர் 20ல் நம்மோடு 29 ஆண்டு வாழ்ந்து 30 ஆவது ஆண்டில் நுழைந்துள்ளது. முதலில் எம்.எஸ். டாஸ் என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத் தந்த மைக்ரோசாப்ட், கிராபிக்ஸ் அடிப்படையிலான விண்டோஸ் இயக்க முறைமையை, 1985 ஆம் ஆண்டு, நவம்பர் 20ல் விண்டோஸ் 1 என அறிமுகப்படுத்தியது. தற்போது விண்டோஸ் 10 பதிப்புடன், கடந்த 29 ஆண்டுகளாக, நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இயங்கி வருகிறது. சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை, வாழ்க்கையின் இன்றியமையாத ஓர் சாதனமாகக் கொண்டு வந்து வெற்றி பெற்ற சரித்திரப் பின்னணியை இங்கு பார்ப்போம்.
 MIk8WHi.jpg
1970 ஆம் ஆண்டு, பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன், இனி எதிர்காலம் என்பது பெர்சனல் கம்ப்யூட்டிங் என்ற பழக்கத்தில் தான் அமைக்கப்படும் என்பதை உணர்ந்தனர். 1975 ஆம் ஆண்டில், இருவரும் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கினர். பின்னர், ஜுன், 1980ல், கம்ப்யூட்டர் புரோகிராம்கள் இயங்க புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை வழங்கினார்கள். அதுவே MS-DOS (Microsoft Disk Operating System) எனச் சுருக்கமாக அழைக்கப்பட்டு மக்களிடம் தீயாய்ப் பரவியது. இருப்பினும், மக்கள் இதனைக் கற்றுப் பயன்படுத்துவதில், சிக்கல்களை எதிர்கொண்டனர்.


அனைவருக்குமான சாதனமாக இல்லாமல், சற்று கற்றுணர்ந்தவர்களுக்கே, டாஸ் இயக்கம் கை வந்த ஒன்றாக அமைந்தது. இதனைக் கண்காணித்த, மைக்ரோசாப்ட், பயனாளர்களின் சிறந்த நண்பனாக இயங்கக் கூடிய, இயக்கக் கூடிய சிஸ்டம் ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்ற வேட்கையுடன், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை வெளியிட்டனர். விண்டோஸ் 1.0-, முதன் முதலில், 1985ல் நவம்பர் 20 அன்று வெளியானது. தொடர்ந்து, டிசம்பர் 9, 1987ல் விண்டோஸ் 2.0 வெளியானது. டெஸ்க்டாப் ஐகான்களும், விரிந்த மெமரியும் கொண்டதாக இது இயங்கியது. இதில் பயன்படுத்தப்பட்ட கிராபிக்ஸ், சற்று கூடுதலான எண்ணிக்கையில் வசதிகளைத் தந்தது. பல விண்டோஸ்களைத் திறந்து இயக்க முடிந்தது. ஸ்கிரீன் கட்டமைப்பினை நம் விருப்பத்திற்கு மாற்றி அமைக்க முடிந்தது. நம் வேலைகளை விரைவாக முடிக்க, ஷார்ட் கட் கீகளை அமைக்க முடிந்தது. 

1988ல், மைக்ரோசாப்ட், உலகின் மிகப் பெரிய பெர்சனல் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமாக உயர்ந்தது. அலுவலக ஊழியர்களுக்கு, விண்டோஸ் இயக்கமும், பெர்சனல் கம்ப்யூட்டரும் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்பட்டது. 
 

1990ஆம் ஆண்டு, மே 22ல் மைக்ரோசாப்ட் விண்டோஸ் பதிப்பு 3.0ஐக் கொண்டு வந்தது. 1992ல் விண்டோஸ் 3.1 அறிமுகமானது. இவை இரண்டும் அறிமுகமான இரண்டு ஆண்டுகளில், ஒரு கோடி விண்டோஸ் உரிமங்கள் விற்பனையாயின. மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட விண்டோஸ் இயக்கமாக விண்டோஸ் 3.1 இடம் பிடித்தது.

1993 ஆம் ஆண்டு, ஜூலை 27ல், விண்டோஸ் என்.டி. (Windows NT) வெளியீட்டுடன், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் செயல்பாட்டில், மிக முக்கியமான மைல்கல்லை எட்டியது. 1980ல் தொடக்க நிலையிலிருந்து, முற்றிலும் புதிய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை தயாரிக்கும் திட்டத்தினை தொடங்கி வெற்றி பெற்றது. விண்டோஸ் என்.டி. 3.1, புதிய 32 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக வெளி வந்தது. உயர்நிலை அறிவியல் அடிப்படையிலான பணிகளுக்கு சிறந்த தோழனாக இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைந்தது. 

1995 ஆம் ஆண்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகச் சிறந்த வர்த்தக ஆண்டாக அமைந்தது. விண்டோஸ் 95 வெளியாகி, ஐந்தே வாரங்களில் 70 லட்சம் உரிமங்கள் விற்பனையாயின. இதில் இணைய இணைப்பிற்கான வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன. டயல் அப் நெட்வொர்க்கிங் எளிமையானது. புதியதாகப் பல ப்ளக் இன் ப்ளே வசதிகள், பயனாளருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன. இதனை வெளியிடுகையில், மைக்ரோசாப்ட் அதுவரை இல்லாத அளவிற்கு விளம்பரத்துடன் வெளியிட்டது. தொலைக் காட்சி வர்த்தக விளம்பரமாக "Start Me Up" என்ற பாடல், புதிய ஸ்டார்ட் பட்டனுடன் வெளியாகி, மக்கள் அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது.

1990 ஆம் ஆண்டில், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், இணையம் குறித்து பல இலக்குகளை வெளியிட்ட வண்ணம் இருந்தனர். நெட்வொர்க்குகளின் நெட்வொர்க்காக இணையம் இணங்கி, உலகில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் இணைக்கும் வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை தெரிவித்து, அந்த இலக்கை நோக்கி உழைக்கத் தொடங்கினார்கள். 1995 ஆம் ஆண்டில், பில்கேட்ஸ் “The Internet Tidal Wave,” என்ற தலைப்பில் குறிப்பு ஒன்றை வழங்கி, பெர்சனல் கம்ப்யூட்டரை அடுத்து, இந்த உலகை ஆளப் போவது இணையம் தான் என்று முழக்கமிட்டார்.

1995 ஆம் ஆண்டு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தொகுப்பின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. ஏற்கனவே உலக வைய விரி வலை என்று அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்த ஆர்ப்பரிப்பில், இந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் இணைந்தது. 

1990 ஆம் ஆண்டில், பணியாற்றும் அலுவலகங்களிலும், வீடுகளிலும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் முக்கிய சாதனங்களாக இடம் பிடித்தன. இணையத்தை அணுக, வீதிகளில் சைபர் கபே (cyber café) என்னும் இணைய மையங்கள் செயல்படத் தொடங்கின. 

1998 ஆம் ஆண்டு, நுகர்வோர்களின் நலனை மையப்படுத்தி, விண்டோஸ் 98 வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின்னர், மைக்ரோசாப்ட் விண்டோஸ் மி மற்றும் விண்டோஸ் 2000 புரபஷனல் (the Windows Me and the Windows 2000 Professional) என இரண்டு விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை வழங்கியது. விண்டோஸ் மி, இசை, விடியொ, ஹோம் நெட்வொர்க்கிங் ஆகியவற்றை மிக அதிக அளவிலும், எளிமையானதாகவும் தந்து புதிய உலகைக் காட்டியது. 

விண்டோஸ் 2000, விண்டோஸ் ஒர்க் ஸ்டேஷன் பதிப்பு 4 ஐக்கான மேம்படுத்தப்பட்ட சிஸ்டமாக இயங்கியதைக் காட்டிலும், விண்டோஸ் 95, 98 மற்றும் விண்டோஸ் என்.டி. ஆகிய சிஸ்டங்களுக்கு மாற்றாகவும் இயங்கியது. விண்டோஸ் என்.டி. ஒர்க்ஸ்டேஷன் 4.0 குறியீடுகள் கட்டமைப்பின் மீதாக, விண்டோஸ் 2000 உருவாக்கப்பட்டாலும், கம்ப்யூட்டரில் பணியாற்ற பெரிய அளவில் நம்பிக்கையைத் தந்தது. பயன்படுத்த மிக எளிதாக இருந்தது. இணைய இணைப்பு ஒத்திசைவு துல்லியமாக அமைந்தது. மொபைல் கம்ப்யூட்டிங் மேற்கொள்ள பல வசதிகள் தரப்பட்டன.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப் பெரிய சாப்ட்வேர் சாதனையாக வெளியானது விண்டோஸ் எக்ஸ்பி. 2001, அக்டோபர் 25ல் வெளியான இந்த விண்டோஸ் சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் நிறுவனமே சென்ற ஆண்டில் விட்டுவிடச் சொல்லி வற்புறுத்திய போதும், இன்னும் பலர் இதனையே பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்களின் பயன்பாட்டு பணியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு, புதிய வடிவமைப்புடன் இது தரப்பட்டதே இதற்கு முதன்மைக் காரணமாக அமைந்தது. வேகமாகச் செயல்பட்டது மட்டுமின்றி, நிலையாகவும் இயங்கியது. 
2001 முதல் 2005 வரை விண்டோஸ் எக்ஸ்பி, பல மாற்றங்களுடன், பல பதிப்புகளாக வெளி வந்தது. இதற்கான ஹெல்ப் மற்றும் சப்போர்ட் மையம், பயனாளர்களுக்கு அதிக அளவில் உதவியது. இது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு சிறந்த வசதி என அனைவராலும் பாராட்டப்பட்டது. விண்டோஸ் எக்ஸ்பி அடுத்து, விண்டோஸ் எக்ஸ்பி 64 பிட் பதிப்பு (2001) விண்டோஸ் எக்ஸ்பி மீடியா செண்டர் எடிஷன் (2002) மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி டேப்ளட் பி.சி. எடிஷன் (2002) என பல பதிப்புகள் வெளியாயின.

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், பாதுகாப்பு குறித்த விவாதங்கள் ஆங்காங்கே சூடு பிடிக்க, மைக்ரோசாப்ட் இந்த பிரிவிலான சவால்களைச் சந்திக்கும் வகையில், 2006 ஆம் ஆண்டில், விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்தினை வெளியிட்டது. விண்டோஸ் விஸ்டா அல்டிமேட் சிஸ்டத்தில் அறிமுகப்படுத்திய BitLocker Drive Encryption என்னும் தொழில் நுட்பம், கம்ப்யூட்டரில் டேட்டாவிற்கான கூடுதல் பாதுகாப்பினை அளித்தது. லேப்டாப் கம்ப்யூட்டர்கள் விற்பனை இந்த கால கட்டத்தில் அதிக எண்ணிக்கையினை எட்டியதால், கம்ப்யூட்டர் பணியில் டேட்டா பாதுகாப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அவற்றை மைக்ரோசாப்ட் தன் முதன்மைச் சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பட்டது. 

வயர்லெஸ் கம்ப்யூட்டிங் என்ற புதிய முறைக்கு பயனாளர்கள் அதிகரிக்க, மைக்ரோசாப்ட் அதனை மையமாகக் கொண்டு, 2007ல், விண்டோஸ் 7 சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. விண்டோஸ் இயக்கத்தில் இயங்குபவர்களுக்குப் பல புதிய டூல்கள் கிடைத்தன. Snap, Peek, and Shake ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டு, விண்டோஸ் இயக்கத்தினை, வேடிக்கை நிறைந்ததாகவும் பயனாளர்களுக்குக் காட்டியது. இதில், விண்டோஸ் டச் ( Windows Touch) என்னும் புதிய டூல் ஒன்று அறிமுகமானது. டச் ஸ்கிரீன் பயன்படுத்திய பயனாளர்கள் இணையத்தைப் புதிய வழிகளில் பயன்படுத்தினர். போட்டோக்களைத் தொட்டுத் தள்ளிவிட்டுப் பார்த்தனர். அதே வழியில் பைல்களையும் போல்டர்களையும் பயன்படுத்தி மகிழ்ந்தனர்.

2012 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் தன்னுடைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை, முழுவதுமாக புரட்டிப் போட்டு, நவீன தொழில் நுட்பத்தில் அமைத்தனர். சிப் செட்டில் காட்டி வந்த ஆர்வத்தை, பயனாளர்களுக்கு ஆச்சரியத்தைத் தரும் அனுபவத்தினைக் கொடுக்க முனைந்தது. அதன் பயனாக, முற்றிலும் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் 8 வெளியானது. டச் மற்றும் மவுஸ் என இரண்டு வழிகளிலும் இயங்கிய சிஸ்டமாக இது அறிமுகமானது. விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் விண்டோஸ் 8 ப்ரோ என்ற பதிப்பும் கிடைத்தது. இத்துடன், விண்டோஸ் ஆர்.டி. என்னும் சிஸ்டம் டேப்ள்ட் பி.சி.க்களை இயக்கியது. 

மிக மெல்லிய கம்ப்யூட்டிங் சாதனங்களுக்கும், கூடுதல் நேரம் மின்சக்தியைத் தரக்கூடிய பேட்டரிகள் இயங்கிய சாதனங்களுக்கும், இது இணைவாக இயங்கியது. விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கக் கூடிய அப்ளிகேஷன்களை மட்டுமே இது இயக்கியது. இதனுடன், எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு இணைந்தே தரப்பட்டது. இது டச் ஸ்கிரீனில் முழுமையாக இயங்கும் வகையில் வடிவமக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தை, பயனாளர்களின் பின்னூட்டங்களுக்கேற்ப, சற்று மாற்றி அமைத்து விண்டோஸ் 8.1 என அமைத்துத் தந்தது. இந்த சிஸ்டத்தில், அதிகப் பயன் தரும் பல அப்ளிகேஷன்கள் இணைந்தன. க்ளவ்ட் கம்ப்யூட்டிங் இணைப்பு இதன் ஓர் அங்கமாக அமைந்தது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பயனாளர்கள் விரும்பிய வசதிகளைப் பல புதிய மேம்பாட்டுடன் இந்த சிஸ்டம் கொண்டிருந்தது.
இறுதியாக 2014, அக்டோபர் 1ல், மைக்ரோசாப்ட் இன்றைய அதன் விண்டோஸ் பதிப்பு 10 ஐ வெளியிட்டது. விண்டோஸ் 9 என்ற ஒன்று இல்லாமல், விண்டோஸ் 10 வந்துள்ளது. ஏனென்றால், இது மொபைல் சாதனங்கள் மற்றும் இணையப் பயன்பாட்டினை ஒட்டி, முற்றிலும் புதிய வகையில் வடிவமைக்கப்பட்ட சிஸ்டம் சாப்ட்வேர் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இன்னும் இதன் முழுமையான மக்கள் பதிப்பு வரவில்லை. சோதனைப் பதிப்பு மட்டுமே கிடைத்து, ஆர்வலர்கள் பயன்படுத்தி, தங்கள் பின்னூட்டங்களைத் தந்து வருகின்றனர்.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மட்டுமே தயாரித்து வழங்கும் நிறுவனம் அல்ல. எம்.எஸ். ஆபீஸ் உட்பட பல பயனுள்ள சாப்ட்வேர் தொகுப்புகளைத் தந்து வருகிறது. இருப்பினும், பலருக்கு முதுகெலும்பாக, கம்ப்யூட்டர்களை ஆட்டிப் படைத்து, பயன்களைத் தரும் இனிய நண்பனாகச் சிறந்த இயக்கமாக விண்டோஸ் விளங்குகிறது. 29 ஆண்டுகள் மட்டுமல்ல; இன்னும் பல்லாண்டு விண்டோஸ் நமக்குப் பயன்படும் வகையில் மாற்றங்களுடன் வரும் என எதிர்பார்ப்போம்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top