சென்னை, டிச.3-

சபரிமலை சீசனை முன்னிட்டு பிரீமியம் ரெயில்கள், சூப்பர்பாஸ்ட் ரெயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சபரிமலை சீசனை முன்னிட்டு பிரீமியம் ரெயில்கள் சூப்பர்பாஸ்ட் ரெயில்களாக மாற்றம்

கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி 11, 14, 18, 21, 23, 25 ஆகிய நாட்களில் வரவிருந்த ‘பிரீமியம்’ சிறப்பு ரெயில் (வண்டி எண்: 00652) ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல சென்னையில் இருந்து 12, 15, 22, 26, 29 ஆகிய தேதிகளில் கேரளாவுக்கு செல்ல இருந்த ‘பிரீமியம்’ சிறப்பு ரெயில் (00651) ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ‘பிரீமியம்’ சிறப்பு ரெயில்கள், சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில்களாக மாற்றப்பட்டு இயக்கப்பட உள்ளன. 

அதன் விவரம் வருமாறு:- 

கொச்சுவேலியில் இருந்து 14, 21, 23 ஆகிய தேதிகளில் இரவு 8.20 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி-சென்னை சென்டிரல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் (06354), மறுநாள் பிற்பகல் 12.55 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். 

அதேபோல 11, 18, 25, ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி- சென்னை சென்டிரல் சூப்பர்பாஸ்ட் ரெயில் (06356) மறுநாள் பிற்பகல் 1.05 மணிக்கு சென்னையை வந்தடையும். சென்னையிலிருந்து 12, 15, 26, 29 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் சென்னை சென்டிரல்-கொச்சுவேலி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் (06355), மறுநாள் காலை 6.30 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும். 

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர்-திருச்சி இடையேயான (வ.எண். 16853, 16854) சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சென்னை எழும்பூர்-மங்களூர் இடையேயான (வ.எண். 16859, 16860) எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று (புதன்கிழமை) முதல் மார்ச் மாதம் 2-ந் தேதி வரை தற்காலிக அடிப்படையில் இருக்கை வசதிகொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. 

சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக இணைக்கப்பட்ட பெட்டியில் எழும்பூரில் இருந்து திருச்சி செல்ல ரூ.145, எழும்பூர்-மங்களூர் ரெயிலில் எழும்பூரில் இருந்து திருச்சி செல்ல ரூ.130, கோவை செல்ல ரூ.185 கட்டணமாக வசூலிக்கப்படும்.

நாகர்கோவிலில் இருந்து இம்மாதம் 21-ந் தேதி புறப்பட்டு மங்களூரு செல்ல இருந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06306) மற்றும் மறுமார்க்கமாக மங்களூரில் இருந்து இம்மாதம் 22-ந் தேதி புறப்பட்டு நாகர்கோவில் வரும் என அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில் (வ.எண்.06305) ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top