சென்னை, டிச.9- 

3 நாட்கள் நடைபெற்ற தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இனி அடுத்த ஆண்டு கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கும். 

தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கடந்த 4-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில், ரூ.1,751 கோடி நிதியை அனுமதிக்க துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டசபை கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

அன்றைய தினம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டப்பணிகள் குறித்தும், ஆவின் பால் விலை உயர்வு குறித்தும், தர்மபுரி, சேலம் அரசு மருத்துவமனைகளில் நடந்த குழந்தைகள் இறப்பு குறித்தும் கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டது. 

அன்றைய கூட்டத்தில், அலுவல் ஆய்வுக்குழு முடிவு பற்றி பேச முயன்று, சபாநாயகர் ப.தனபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க. உறுப்பினர் ஜெ.அன்பழகன் வெளியேற்றப்பட்டார். 

சட்டசபைக்கு அன்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, சட்டமன்ற உறுப்பினர் பதிவேட்டில் மட்டும் கையெழுத்து போட்டுவிட்டு சென்றுவிட்டார். 

2-வது நாளாக 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடந்த சட்டசபை கூட்டத்தில், கச்சத்தீவை மீட்கக்கோரியும், மேகதாது, பாம்பாற்றில் அணை கட்டுவதை நிறுத்த கர்நாடகா, கேரளா அரசுகளுக்கு அறிவுரை வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்யப்படுவது குறித்தும், வடகிழக்கு பருவமழையால் சாலைகள் சேதமடைந்தது குறித்தும் சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டது. 

அன்றைய தினம், தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரை முற்றுகையிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அன்று, சட்டசபைக்கு வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், வருகைப்பதிவேட்டில் மட்டும் கையெழுத்து போட்டு விட்டு சென்றுவிட்டார். 

இந்த நிலையில், 3-வது மற்றும் கடைசி நாள் சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், சத்துணவு திட்டத்திற்கு அதிக விலை கொடுத்து முட்டை கொள்முதல் செய்தது குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டது. 

நேற்றைய கூட்டத்திலும், தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த 3 நாள் கூட்டத்தில், 7 சட்ட முன் வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 

இறுதியாக, தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் தீர்மானத்தை அவை முன்னவரும், மின்துறை அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, மறுதேதி குறிப்பிடாமல் சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார். 

இனி அடுத்த ஆண்டு (2015) கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கும். அதன்பிறகு, 2015-2016-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். 

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top