புதுச்சேரி, டிச.8–
புதுவை பிராந்தியம் மாகி பள்ளூரில் உள்ள தொடக்க பள்ளிக்கு புதிய கட்டிடம் ரூ.45 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் மாநில அளவிலான கைபந்து, சதுரங்க போட்டி தொடக்க விழா பள்ளூர் தொடக்க பள்ளி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.மாகியும்–ஏனாமும் எனது இரு கண்கள்: ரங்கசாமி பேச்சு
விழாவுக்கு அமைச்சர் தியாகராஜன் தலைமை தாங்கினார். முதல்–அமைச்சர் ரங்கசாமி கட்டிடத்தை திறந்து வைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:–
கல்வியில் சிறந்த மாநிலமாக புதுவை மாநிலம் வர வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். இதற்காக கல்விக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்து வருகிறோம். மாகி பகுதி 100 சதவீத கல்வி அறிவு பெற்ற பகுதியாக திகழ்கிறது என்று வல்சராஜ் எம்.எல்.ஏ. குறிபிட்டார். இது அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
அனைத்து பள்ளிகளும் சொந்த கட்டிடத்தில் இயங்க வேண்டும், இதற்கு தேவையானவற்றை அரசு செய்து வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கி தந்த முன்னாள் மத்தியமந்திரி நாராயணசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஒரு மனிதனுக்கு உடல் முழுவதும் நல்லபடியாக செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக கண்கள் நன்றாக இருக்க வேண்டும். ஏனாம், மாகி பகுதியை நாங்கள் இரு கண்களாகவே பாவிக்கிறோம். ஏனாம் குட்டி சிங்கப்பூராக திகழ்கிறது. அதைபோல் மாகியும் வளர்ச்சி அடைந்துள்ளது.
1990–ம் ஆண்டு முதல் நான் மாகி பகுதிக்கு வந்து சென்றேன். ஒவ்வொரு முறை வரும்போதும் மாகி புதிய வளர்ச்சி கண்டுள்ளதை பார்க்கிறேன். மாகியில் சாலைகளை மேம்படுத்துவதற்காக வல்சராஜ் எம்.எல்.ஏ. ரூ.14 கோடிக்கான திட்டத்தை அளித்துள்ளார். அதற்கு நான் ஒப்புதல் அளித்துள்ளேன். கேரளா என்றாலே அழகுதான். அந்த அழகு மாகியில் தொடரவேண்டும். மாகியின் வளர்ச்சிக்கு அரசு என்றுமே உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ராதாகிருஷ்ணன் எம்.பி. பேசிய தாவது:–
நான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன் முறையாக தற்போது மாகி வந்துள்ளேன். இங்கு என்னை அழைத்த முதல்–அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புதுவை மாநிலம் கலவியில் சிறந்த மாநிலமாக வரவேண்டும் என முதல்–அமைச்சர் ரங்கசாமி அதிக முயற்சிகளை எடுத்து வருகிறார். மாகியையும், ஏனாமையும் சரிசமமாக முதல்–அமைச்சர் பாவிக்கிறார். அனைத்து மக்கள் நலனுக்கும் முக்கியத்துவமும் அளித்து வருகிறார்.
ஒவ்வொரு முறை மாகிக்கு வரும்போதும் மாகி புதிய வளர்ச்சிகளை பெற்றுள்ளது. வல்சராஜ் எம்.எல்.ஏ. மாகிக்காக அனைத்தையும் கேட்டு பெறுகிறார். முதல்– அமைச்சர் அவருக்கு உறுதுணையாக இருந்து மாகி வளர்ச்சி பெற முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பாலன், என்.எஸ்.ஜே. ஜெயபால், வாரியத் தலைவர்கள் சுரோஷ், காரைக்கால் சுரேஷ், ஞானசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் ஏ.வி.ஸ்ரீதரன் அச்சுதானந்தம், முன்னாள் நகரசபை தலைவர் ரமேஷ், கல்வித்துறை இயக்குனர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top