புதுடெல்லி, டிச.8-

தடைசெய்யப்பட்ட சிமி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 7 விசாரணைக் கைதிகள் மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்ட சிறையிலிருந்து கடந்த ஆண்டு தப்பிச் சென்றனர்.
பாகிஸ்தானின் தூண்டுதலால் ம.பி. சிறையில் இருந்து தப்பிய கைதிகள் தாக்குதல் நடத்த திட்டமா?
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறை காவலர்கள் லோகேஷ் கிர்வே மற்றும் சுரோ திவாரி ஆகியோரை கத்தியால் தாக்கிவிட்டு சிமி அமைப்பைச் சேர்ந்த கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவர்களிடமிருந்த துப்பாக்கிகளையும் அந்த கைதிகள் எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று, தப்பிய கைதிகளை பிடிக்க முயன்ற அதிரடிப் படைவீரர்கள் இருவரையும் தாக்கிவிட்டு அவர்களிடமிருந்த வயர்லஸ், துப்பாக்கிகள் ஆகியவற்றையும் பறித்துச் சென்றனர்.

இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். பிடிபடாமல் இருக்கும் 5 பேரும் தடைசெய்யப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள். இவர்களை கண்டால் உடனடியாக கைது செய்யும்படி அனைத்து மாநில போலீசாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் பகுதியில் உள்ள வங்கியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்திலும், மே மாதம் 1-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலும் இந்த 5 பேருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. இவர்கள் கர்நாடகம், மராட்டியம், ராஜஸ்தான் மாநிலங்களில் மறைந்து வாழக்கூடும் என கூறப்படுகின்றது.

தெலுங்கானா, உ.பி., கர்நாடகம், மராட்டியம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இவர்களது நடமாட்டம் இருந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பை (ஐ.எஸ்.ஐ) சேர்ந்த ஒரு அதிகாரியிடம் ஒரு கூலிப்படை தலைவன் பேசிய செல்போன் உரையாடலை இந்திய உளவுப்படையினர் சமீபத்தில் ஒட்டுக் கேட்டுள்ளனர். ‘அவர்களுக்கு மிக முக்கியமான ஒரு வேலை ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறிது பொறுமையாக இருங்கள்’ என கூலிப்படை தலைவன் பேசியது அம்பலம் ஆகியுள்ளது.

இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்நாடகம், மராட்டியம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top