வேலூர், டிச.8–
12–வது உற்பத்தி மற்றும் மேலாண்மை குறித்த உலகளவில் மாநாடு வேலூர் வி.ஐ.டி.யில் இன்று நடந்தது. துணைவேந்தர் ராஜூ வரவேற்றார். ஒருங்கிணைப்பு செயலாளர் அந்தோணி சேவியர் அறிக்கையை வாசித்தார்.உலகம் திரும்பி பார்க்கும் அளவுக்கு உற்பத்தி திறனை இந்தியா பெருக்க வேண்டும்: சதாசிவம் பேச்சு
அமைப்பின் செயலாளர் பிரசாத் எர்லகட்டா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கேரள கவர்னர் சதாசிவம் பங்கேற்று மாநாடு மலரை வெளியிட்டார்
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:–
இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் உற்பத்தி மற்றும் சேவை துறை அவசியம். இரண்டும் இருந்தால் வேலை வாய்ப்பு பெருகும்.
உற்பத்தியாளர்கள் அவர்கள் துறையில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அதற்கு பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் துணை நிற்க வேண்டும்.
உற்பத்தி துறையில் வளர்ச்சி அடைய அறிவு திறன் தேவை. அதற்கு இந்த மாநாடு பாலமாக அமையும். மேலும் உற்பத்தி துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்கு வேண்டிய வழிமுறைகளை கையாளும் விதமாக இந்த மாநாடு அமையும்.
இந்தியா மனித வளம், இயற்கை வளம் கொண்ட நாடு. மூலப்பொருட்களை தொழில்நுட்ப வசதியுடன் பொறியாளர், விஞ்ஞானிகள் உதவியுடன் உலகத்தையே நமது பக்கம் திரும்பி பார்க்கும் அளவு உற்பத்தி திறனை பெருக்க வேண்டும். அதற்கான திறன் நம்மிடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் வி.ஐ.டி. விசுவநாதன் பேசியதாவது:–
இந்த மாநாடு 12–வது மாநாடாகும். 10 வருடத்திற்கு முன்பாக இதே வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. இங்கு மீண்டும் 2–வது முறையாக மாநாடு நடைபெறுவது நமக்கு பெருமை.
இந்தியாவில் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். அதற்காக ‘மேக் இன் இந்தியா இந்தியாவில் செய்’ என்ற கொள்கையை வலியுறுத்தி வருகிறார். அதற்காக வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தொழில் அதிபர்கள் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் தொழிலதிபர்கள் இந்தியாவுக்கு அழைத்து தொழில் தொடங்க கூறி வருகிறார்.
இதற்கு மத்திய அரசு கொள்கை முறைகளை மாற்ற வேண்டும். மேலும் ஊழல்களையும் ஒழிக்க வேண்டும். உலகளவில் இந்தியா உற்பத்தியில் 1.8 சதவீதம் உள்ளது. ஆனால் சீனா 13.7 சதவீதம் உற்பத்தி செய்கிறது. அமெரிக்கா, சீனா முதலிடத்தை மாறி, மாறி பிடித்து வருகிறது.
இந்தியாவில் 200 வருடமாக ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் நம்மிடம் உள்ள மூலப்பொருட்களை எடுத்து சென்று அங்கிருந்து உற்பத்தி செய்து பொருட்களை இறக்குமதி செய்தனர். அதே நிலைத்தான் தற்போதும் உள்ளது.
300 பில்லியன் டாலர்கள் மூலப்பொருட்களை நாம் ஏற்றுமதி செய்கிறோம். ஆனால் 500 பில்லியன் டாலர்கள் பொருட்களை இறக்குமதி செய்கிறோம். இதனை நாம் மாற்ற வேண்டும்.
இதனை நமது பொறியாளர்கள், விஞ்ஞானிகள் கொண்டு மாற்றி இந்தியாவிலேயே உற்பத்தியை பெருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் டீன் சேகர் நன்றி கூறினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top