புதுடெல்லி, டிச. 8–

டெல்லியை சேர்ந்த 27 வயது இளம்பெண் குர்கான் நகரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 5-ம் தேதி மாலை 7 மணிக்கு பணி முடிந்ததும் நண்பர்களுடன் ஓட்டலுக்கு சென்று விருந்து சாப்பிட்டார். பின்னர் அவரை நண்பர்கள் டெல்லி வசந்த விகார் வரை காரில் கொண்டு வந்து இறக்கி விட்டனர்.
காரில் பெண் கற்பழிப்பு: உபேர் டாக்சி சேவைக்கு டெல்லி அரசு தடை
அப்போது இரவு 9.30 மணியாகி விட்டபடியால் அங்கிருந்து இந்தர்லோக் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்ல வேறொரு வாடகை டாக்சியில் ஏறி, பின் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

சிறிது தூரம் சென்றதும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த காரை ஒதுக்குப்புறமாக டிரைவர் நிறுத்தினார். ஏன் காரை இங்கு நிறுத்துகிறாய்? என்று அந்த பெண் கேட்பதற்குள் பின் இருக்கையில் டிரைவர் தாவி குதித்தார். கையில் வைத்திருந்த இரும்பு கம்பியை காட்டி கொன்று விடுவதாக அந்த பெண்ணை மிரட்டினார்.

பின்னர், காரிலேயே அப்பெண்ணை கற்பழித்தார். நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு, அந்த காரிலேயே மீண்டும் அழைத்து சென்று அவரது வீட்டின் அருகில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் டெல்லி சாராய் ரோகில்லா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். முன்னதாக அந்த பெண் காரில் கற்பழிக்கப்பட்ட பின் டிரைவருக்கு தெரியாமல் அவரையும், கார் நம்பர் பிளேட்டையும் செல்போனில் படம் பிடித்திருந்தார். அதையும் போலீசில் ஒப்படைத்தார்.

இதை வைத்து போலீசார் விசாரித்தபோது, அந்த கார் உபேர் என்ற டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான என்றும் டிரைவர் பெயர் ஷிவ் குமார் யாதவ் என்றும் தெரியவந்தது. 32 வயதான அவர் காரை வழியில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

டிரைவரிடம் இருந்த ஜி.பி.எஸ். தகவல் தொடர்பு கருவியும், செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் அந்த கார் மதுரா அருகே அனாதையாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

கார் டிரைவரை பிடிக்க டெல்லி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மதுரா பகுதியில் ஒளிந்திருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கார் டிரைவர் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, இதேபோல் வேறொரு பெண்ணை கற்பழித்த வழக்கில் தற்போது பிடிபட்ட டாக்சி டிரைவரான ஷிவ் குமார் யாதவ் இதற்கு முன்னர் 7 மாத சிறை தண்டனை அனுபவித்தது தெரிய வந்தது.

இந்நிலையில், சர்வதேச அளவில் டாக்சி சேவை அளிப்பதில் புகழ்பெற்ற நிறுவனமான உபேர் டாக்சிகள் டெல்லி நகரில் இயங்க டெல்லி அரசு இன்று தடை விதித்துள்ளது.

பணிக்கு அமர்த்தும் டிரைவர்களின் பின்னணி பற்றி ஒழுங்காக விசாரிக்காமல் வேலைக்கு அமர்த்துவது, கார்களில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்தாதது உள்ளிட்ட இந்த நிறுவனத்தின் பல்வேறு குறைகளை சுட்டிக் காட்டியுள்ள டெல்லி அரசு, டெல்லிக்கு உட்பட்ட எந்தப் பகுதியிலும் இன்று முதல் உபேர் டாக்சிகள் இயங்கக் கூடாது என்று நிரந்தரத் தடை விதித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top