சென்னை, டிச. 8-

கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் முதல் கட்சியாக இணைந்த ம.தி.மு.க., அக்கூட்டணியில் முதல் கட்சியாக வெளியேறியுள்ளது. பா.ஜ.க கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்: வைகோ அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலின் போதும் அதற்கு பின்னரும், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, இலங்கை தொடர்பாக வாஜ்பாய் கடைபிடித்த அணுகுமுறையை கையாளவேண்டும் என்று வைகோ வலியுறுத்தி வந்தார். 

ஆனால் அவரது வேண்டுகோளுக்கு மாறாக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைபிடித்த அதே அணுகுமுறையை மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து கடைபிடித்து வந்தது. இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பது, இலங்கைக்கு எதிராக ஐ.நா. அமைத்த போர்க்குற்ற விசாரணைக்கு அனுமதி மறுப்பு என பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக நடந்து வருகிறது. 

கடந்த சில தினங்களுக்கு முன் நேபாள நாட்டில் நடைபெற்ற சார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இலங்கையில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்று அதிபராகவேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார். இது வைகோ உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை வைகோ கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி பா.ஜ.க. கூட்டணியை விட்டு ம.தி.மு.க. வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்படவேண்டும் என்று கூறியிருந்தார். அவரது கருத்தை தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. தலைவர்களோ, தேசிய தலைவர்களோ கண்டிக்கவில்லை. 

அதே போல் பா.ஜ.க. தேசிய செயலாளராக உள்ள எச். ராஜா. பிரதமரை தரக்குறைவாக விமர்சித்தால் வைகோ தமிழகத்தின் வீதிகளில் நடமாட முடியாது என்று எச்சரிக்கை விடுத்தார். ராஜாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர்களோ, அமித் ஷா மற்றும் மோடி ஆகியோரோ அவரை கண்டிக்கவில்லை. இப்படி முரண்பாடுகள் அதிகரித்து வந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் புதிய கூட்டணி அமைக்க பாடுபட்ட, காந்திய மக்கள் இயக்க தலைவரான தமிழருவிமணியன், வைகோ உடனடியாக பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 

இதனிடையே வைகோவை தங்கள் கூட்டணியில் தக்கவைக்க கடைசி கட்ட முயற்சிகளை பா.ஜ.க. எடுத்துவருவதாக தெரிகிறது. அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பொன். ராதாகிருஷ்ணன், வைகோ பா.ஜ.க. கூட்டணியில் தான் நீடிக்கிறார் என்று நேற்று முன்தினம் கருத்து தெரிவித்துள்ளார். அதே போல் அக்கட்சியின் தமிழக பொறுப்பாளரான முரளிதர ராவும் ம.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்வதாக நேற்று பேட்டியளித்தார். இப்படிப்பட்ட சூழலில் வைகோ என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை அறிந்துகொள்ள ம.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.

இன்று வைகோ எடுக்கும் முடிவு தமிழகத்தில் அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் எப்படி அமையும் என்பதை தீர்மானிக்கும் தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்றே அரசியல் வல்லுனர்கள் கருதினர். 

இந்த நிலையில் அக்கட்சியின் ஆட்சி மன்ற குழு கூட்டத்தை வைகோ இன்று கூட்டியிருந்தார் அதன்படி காலை 10.30 மணிக்கு இக்கூட்டம் துவங்கியது. பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்ற இக்கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணியில் தொடர்வதா? வேண்டாமா? என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் இலங்கை அரசுக்கு தொடர்ந்து ஆதரவாக நடந்து வரும் மத்திய அரசை கண்டித்து பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top