சென்னை, டிச. 2–
நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலையில் வரும் வெள்ளிக்கிழமை (5–ந் தேதி) கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது.
அன்று அதிகாலை கோவிலில் பரணி தீபமும், மாலை மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும் மகா தீபத்தை நேரில் கண்டு வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கும் என்பது ஐதீகமாகும்.திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள்
தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் வரும் வெள்ளிக்கிழமை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று மிக விமரிசையான கிரிவலமும் நடைபெறும்.
கிரிவல பாதைகளில் ஆங்காங்கே அன்னதானமும் நடைபெறும். இதையொட்டி பக்தர்களுக்கு உதவும் வகையில் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விரிவாக செய்துள்ளது.
திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு உதவ தமிழக அரசின் 108 அவசர கால சிகிச்சைப் பிரிவினரும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதன்படி கார்த்திகை திருவிழாவின் போது திருவண்ணாமலையில் 15, 108 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் இருக்கும். தேவைக்கு ஏற்ப இந்த ஆம்புலன்சுகள் விரைந்து செயல்படும்.
என்றாலும் மக்கள் நெரிசல் காரணமாக கோவில் அருகிலும், கிரிவலப்பாதையிலும் 108 ஆம்பலன்சுகளால் செல்ல முடியாத நிலை ஏற்படலாம். இதை கருத்தில் கொண்டு கார்த்திகை தீப திருவிழாவுக்காக 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கிரிவலப்பாதை நெடுக இந்த நடமாடும் மருத்துவ குழுவினர் ஆங்காங்கே நிற்பார்கள். அவர்கள் எல்லா முதல்–உதவி மருந்து மற்றும் உபகரணங்கள் வைத்திருப்பார்கள்.
பாதிக்கப்படும் பக்தர்களுக்கு அவர்கள் உடனுக்குடன் சிகிச்சை அளிப்பார்கள். இதற்கு உதவும் வகையில் சுமார் 50 கல்லூரி மாணவ–மாணவிகளும் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தீப திருவிழாவன்று நூற்றுக்கணக்கானோர் மலை மீது ஏறுவது உண்டு. அவர்களுக்கு ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் அவற்றை கொடுக்க தனி மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவை தவிர திருவண்ணாமலையில் உள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளிலும் அவசர கால சிகிச்சைக்களுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த மருத்துவக் குழுவினரை எளிதாக அடையாளம் காண, அவர்களுக்கு தனி உடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் மருத்துவ சிகிச்சைகள் பற்றி தகவல்கள் பரிமாறி கொள்ள மருத்துவக் குழுவினருக்கு வாக்கி–டாக்கிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நாளை மறுநாள் (4–ந் தேதி) மாலை முதல் 6–ந் தேதி காலை வரை இந்த மருத்துவ சேவைகளை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தீப திருவிழாவின் போது மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் 108, 104 எண்களில் அழைத்து பயன்பெறலாம்.
தீப திருவிழாவுக்கு வரும் பக்தர்களில் இருதய நோய் மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சினை உள்ளவர்கள் மலை ஏறாமல் இருப்பதும், கிரிவலத்தின் போது நெரிசலுடன் செல்லாமல் இருப்பதும் நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தீப திருவிழாவுக்கு வரும் போது குறித்த நேரத்தில் சாப்பிடுவதும், மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும் அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top