வருமான வரி வழக்கில், ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சமரச மனுவை வருமான வரித்துறையினர் ஏற்றுக் கொண்டதையடுத்து, அவர் ரூ.2 கோடி அபராதம் செலுத்தினார்.
இதனையடுத்து இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1992 -93, 1993 - 94 ஆகிய நிதியாண்டுகளில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பாக கடந்த 1996-ல், வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு சென்னை எழும்பூரிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 18 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இவ்வழக்கை விரைந்து விசாரித்து முடிக்குமாறு இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை விரைவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் அக்டோபர் 1-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அவர்கள் விலக்கு பெற்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உரிய அபராதத் தொகையை செலுத்தி, வழக்கில் சமரசம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக ஜெயலலிதா மற்றும் சசிகலா சார்பில் வருமான வரித்துறையிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு வருமான வரித் துறையின் பரிசீலனையில் இருந்ததால் எழும்பூர் நீதிமன்றத்தில் நடை பெற்றுவரும் வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வழக்கில், ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சமரச மனுவை வருமான வரித்துறையினர் ஏற்றுக் கொண்டதையடுத்து, அவர் ரூ.2 கோடி அபராதம் செலுத்தியுள்ளார். இத்தகவலை, எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்த வழக்கில் இறுதி உத்தரவு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை டிச.11-க்கு ஒத்திவைப்பு:
இதற்கிடையில், வருமான வரித் துறை கமிட்டியிடம் வரி பாக்கி உள்ளிட்டவற்றை செலுத்திவிட்டோம். வருமான வரித்துறை பதில் அளிக்கும் வரை வழக்கு விசாரணையை 2 வாரத்துக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதா தரப்பு கோரிக்கையை ஏற்று அடுத்த கட்ட விசாரணையை டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top