புதையலுக்காக பழங்கால நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், அதனைக் காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மதுரை, விழுப்புரம், புதுக்கோட்டை, தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு, பாறை ஓவியங்கள், நடுகற்கள் ஏராளமாக உள்ளன. இத்தகைய வரலாற்று சின்னங்களை சமூக விரோதிகள் சிதைப்பதால் பழங்கால வரலாற்று பெருமைகளை இழக்கும் நிலை உள்ளது.
கிருஷ்ணகிரி, சூளகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் மன்னர்கள் ஆட்சியின் போது தலைநகராக விளங்கியவை. இந்தப் பகுதிகளை ஆண்ட போசாள மன்னர்கள், சோழர்கள், விஜயநகர பேரரசர்கள் உள்ளிட்ட அரசர்களால் கட்டப்பட்ட 20-க்கும் மேற்பட்ட கோட்டைகள், அப்போது நடந்த போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக நடப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுகற்கள் உள்ளன. இவற்றில் தங்க நகை, ஆபரணங்கள் கொண்ட புதையல்கள் உள்ளதாக தவறான நம்பிக்கை சிலரிடம் உள்ளது.
இதனை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிலர் அதிகமாக நம்புகின்றனர். இதனால் சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதையலுக்காக நடுகற்கள் அருகே பெரிய அளவில் பள்ளம் தோண்டி, பூஜைகளை நடத்தி கற்களை சேதப்படுத்தி விடுகின்றனர். இதேபோல் மலையில் உள்ள கோட்டைகளில் பதுங்கு குழிகள், தடுப்பு சுவர்கள் ஆகியவற்றை உடைத்து புதையல் தேடுகின்றனர்.
இதனால் பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் அழிவு நிலையை நோக்கி செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.
பாதுகாக்க கோரிக்கை இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன், ’தி இந்து’விடம் கூறும்போது, பாதுகாக்கப்பட வேண்டிய நடுகற்கள் உள்ளிட்டவற்றை புதையலுக்காக சேதப்படுத்துகின்றனர். மற்றொரு புறம் மறைவான இடத்தைத் தேடி செல்லும் கும்பல் தொல்லியல் சின்னங்கள் மீது அமர்ந்து மது அருந்துவது, தகாத செயல்களில் ஈடுபடுவது, ஓவியங்களை அழிப்பது, கல்வெட்டுகளில் தங்கள் பெயர்களை பொறிப்பது உள்ளிட்ட செயல்களால் கடந்த கால வரலாறுகள் சிதைந்து வருகின்றன.
குறிப்பாக பெருமை வாய்ந்த `மல்லச்சந்திரம் கற்திட்டைகள்’ பகுதியில் புதையல் தேடுவதாக பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முகாமிட்டு தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் வருங்கால தலைமுறையினர் தவறான தகவல்களை அறியும் நிலை உள்ளது. இதனைத் தடுக்க தமிழக அரசு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தொல்லியல் குறித்து பயிற்சி அளித்து, பழமையான தொல்லியல் சின்னங்களைக் காக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சின்னங்களை பாதுகாக்க முடியும் என்றனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top