தியோதர் கோப்பை ஒருநாள் போட்டி அரையிறுதியில் 151 ரன்களை விளாசிய மனோஜ் திவாரி, அமித் மிஸ்ரா பந்துகள் மீது ’சிறப்பு கவனம்’ செலுத்தினார். 

மும்பையில் நேற்று நடைபெற்ற தியோதர் கோப்பைக்கான ஒருநாள் போட்டி முதல் அரையிறுதியில் தனது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரான 151 ரன்களை எடுத்தார் மனோஜ் திவாரி.

கிழக்கு மண்டல அணியின் கேப்டனான மனோஜ் திவாரி, வடக்கு மண்டல அணிக்கு எதிராக 121 பந்துகளில் 15 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 151 ரன்களை எடுத்தார். இது லிஸ்ட் ஏ போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். இவரது ஆட்டத்தினால் கிழக்கு மண்டலம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்களை எடுக்க வடக்கு மண்டல அணி (யுவராஜ் சிங் கேப்டன்) 221 ரன்களுக்கு சுருண்டது.

இதனால் கிழக்கு மண்டலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

சந்தீப் சர்மா, ரிஷி தவன், பர்வேஸ் ரசூல் போன்ற முன்னணி வடக்கு மண்டல பவுலர்களை மனோஜ் திவாரி எந்த வித சிரமமும் இன்றி ஆடியதோடு, இந்திய அணியின் லெக்ஸ்பின்னரான அமித் மிஸ்ரா மீது ‘சிறப்பு கவனம்’ செலுத்தினார்.

மிஸ்ரா பந்துகளை புல், ஸ்வீப், டிரைவ், மேலேறி வந்து தூக்கி அடித்தல் என்று 35 பந்துகளில் அமித் மிஸ்ராவை மட்டும் 48 ரன்கள் விளாசினார் மனோஜ் திவாரி. இதனால் ஒரு நேரத்தில் நன்றாக இருந்த அவரது பந்து வீச்சு கடைசியில் 9 ஓவர்கள் 60 ரன்கள் என்று ஆனது. 

12-வது ஓவரில் கிழக்கு மண்டலம் 33/2 என்று தடுமாறிக் கொண்டிருந்த போது களமிறங்கிய மனோஜ் திவாரி 42 பந்துகளில் 50 ரன்களையும் 93 பந்துகளில் 100 ரன்களையும் பிறகு அடுத்த 50 ரன்களை 27 பந்துகளிலும் விளாசினார்.

40-வது ஓவரில் 178/5 என்று இருந்த கிழக்கு மண்டல அணியை தனது சிக்சர்கள், பவுண்டரிகளால் கடைசி 10 ஓவர்களில் 95 ரன்களைக் குவிக்க உதவி புரிந்தார். இதில் அவர் 62 ரன்கள் விளாசியதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு மண்டல அணியில் யுவராஜ் சிங் 10 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து வைடு பந்தை துரத்தி கேட்ச் கொடுத்து வெளியேறி ஏமாற்றமளித்தார்.

மனோஜ் திவாரியின் முதல் தர கிரிக்கெட் சராசரி 60 ரன்கள், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அவரது சராசரி 40 ரன்கள். இன்னமும் இந்திய அணியில் இவரால் நிலையான இடம் பெற முடியவில்லை.

இன்று மும்பையில் தியோதர் கோப்பைக்கான 2-வது அரையிறுதி ஆட்டம் தெற்கு மண்டல, மேற்கு மண்டல அணிகளிடையே நடைபெற்று வருகிறது.

தெற்கு மண்டலம் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுக்க மேற்கு மண்டல அணி 38 ஓவர்களில் 228/6 என்று ஆடி வருகிறது. இளம் வீரர் சூரியகுமார் யாதவ் 51 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 64 ரன்கள் எடுத்து வெளுத்துக்கட்டிக் கொண்டிருக்கிறார். அவருடன் அக்சர் படேல் 15 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top