சென்னை, டிச.2-

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனியை விலக சொல்ல வேண்டியது ஏன்? என்று என்.சீனிவாசன் கேள்வி விடுத்தார்.

6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் கமிட்டி இறுதி அறிக்கையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசனுக்கு சூதாட்டத்தில் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்து இருந்தது. ஆனால் சூதாட்ட விவகாரம் குறித்து அறிந்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சூதாட்டம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தாகூர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி (குருநாத் மெய்யப்பன்) பெட்டிங்கில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தும் அந்த அணியை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி விடுத்தனர். அத்துடன் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலில் முட்கல் கமிட்டி அறிக்கையில் இடம் பெற்று இருப்பவர்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, அந்த அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவராகவும் இருப்பது கவலை அளிக்கக்கூடிய விஷயம் என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2015) பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முக்கிய ஸ்பான்சர்களில் ஒன்றாக சென்னையை சேர்ந்த எம்.ஆர்.எப். நிறுவனம் இணைவதை அறிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உலக கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.
சி.எஸ்.கே. கேப்டன் பதவியில் இருந்து டோனியை விலக சொல்ல வேண்டியது ஏன்?: என்.சீனிவாசன் கேள்வி
இதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.சீனிவாசன், எம்.ஆர்.எப். நிறுவன நிர்வாக இயக்குனர் கே.எம்.மேமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிரிக்கெட் ஆட்டத்துடன் நீண்ட காலம் தொடர்புடைய எம்.ஆர்.எப். நிறுவனம் உலக கோப்பை போட்டிக்கு ஸ்பான்சராக இணைந்து இருப்பது சரித்திர நிகழ்வாகும் என்று மேமன் தெரிவித்தார்.

விழா முடிந்த பின்னர் ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம் குறித்து என்.சீனிவாசனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், ‘ஐ.பி.எல். சூதாட்டம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்படி இருக்கையில் அது குறித்து நான் கருத்து எதுவும் சொல்ல முடியாது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனியை ராஜினாமா செய்ய சொல்வீர்களா? என்று கேட்கிறீர்கள். டோனி பதவி விலக வேண்டும் என்று நான் ஏன் சொல்ல வேண்டும்?. ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினையால் இந்திய கிரிக்கெட்டின் மதிப்பு பாதிக்கப்பட்டு விட்டது என்று சொல்வதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். இந்திய கிரிக்கெட்டின் புகழ் மங்கவில்லை’ என்று தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top